Sorry, you need to enable JavaScript to visit this website.

கீழடி

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டத்தில் கீழடி கிராமத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் 110 ஏக்கருக்கும் அதிகமான அளவில், விரிந்த நிலப்பரப்பில், பண்பாட்டு குவியல்களைக் கொண்ட மண் மேடு அமைந்துள்ளது.

முன்னதாக, இந்திய தொல்லியல் துறையின் பெங்களுரூ அகழாய்வுப் பிரிவின் வாயிலாக 2014-2015, 2015-2016 மற்றும் 2016-2017 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இத்தொல்லியல் தளத்தில் மறைந்துள்ள மதிப்புறுப் பொருட்கள் மற்றும் தொல்லியல் சின்னங்களை வெளிக்கொணரும் பொருட்டு, மாநில தொல்லியல் துறையானது மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய (ஊஹக்ஷஹ) நிலைக் குழுவின் அனுமதி பெற்று அகழாய்வு மேற்கொண்டு வருகின்றது. 2017-18 ஆம் ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் ரூ. 55 இலட்சம் செலவில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.

கீழடி அகழாய்வு - முக்கிய கண்டுபிடிப்புகள்

இக்காலகட்டத்தில் நடைபெற்ற அகழாய்வில் அரிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஏராளமான கட்டுமானப் பொருட்கள் (செங்கல் கட்டுமானம், சுடுமண்ணாலான உறை கிணறுகள் மற்றும் விரல்களால் மிக அழுத்தி உருவாக்கப்பட்ட பள்ளங்கள் வழியாக மழை நீர் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்ட கூரை ஓடுகள் விழுந்த நிலையில்) உள்ளிட்ட 5,820 தொல்பொருட்கள் வெளிகொணரப்பட்டுள்ளன.

மேலும், தங்கத்தினால் ஆன சில ஆபரணப் பாகங்கள், செம்பிலான தொல்பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருட்கள் (சதுரங்கப் பொருட்கள்), வட்டச் சில்லுகள், காதணிகள், தக்களிகள், மனிதன் மற்றும் விலங்குகளின் உடைந்த மற்றும் முழு பொம்மை உருவங்கள் மற்றும் சுடுமண் மணிகள், கண்ணாடி மணிகள், மதிப்பு குறைவான கல் மணிகள் ஸஇரத்தினக் கல் மணிகள் (அகேட்), சூது பவள மணிகள் (கார்னீலியன்) மணிகள், படிக மணிகள்] மற்றும் தொன்மை வாய்ந்த மட்பாண்ட வகைகளின் எச்சங்களான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கருப்பு நிறப் பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கருப்பு பானை ஓடுகள், சிவப்பு நிறப் பானை ஓடுகள், ரோமானிய முத்திரையிட்ட பானை ஓடுகள், அரிட்டேன் பானை ஓட்டுத் துண்டுகள் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன.

பானைகளைச் சுடுவதற்கு முன்னரும் மற்றும் சுட்டப் பின்னரும் வரையப்பட்ட கீரல் குறியீடுகளைக் கொண்ட பானை ஓடுகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டன. மேலும், தமிழ் பிராமி எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் நிறைய எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

இது கோயில் நகரமான மதுரைக்கு மிக அருகிலுள்ள பகுதியாகும். இங்கு வரலாற்றுத் தொன்மை கொண்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றதன் மூலம், பண்டைய தமிழர் நாகரிகத்தின் பண்பாட்டு வளம் சுட்டிக் காட்டப்படுவதால் கீழடியில் மறைந்துள்ள பண்பாட்டு மதிப்புறுப் பொருட்களை தேடும் பணிகளை எதிர்காலத்தில் தொடர்வதும், பண்டைய சமூகத்தின் பண்பாட்டு வளங்களை வெளிப்படுத்துவதும் காலத்தின் அவசியத் தேவையாகிறது.