Sorry, you need to enable JavaScript to visit this website.

சடையார் கோயில் - திருச்சின்னம்பூண்டி

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூருக்கு திருச்சடைமுடி என்றும், இவ்வூரிலுள்ள சிவன் கோயிலுக்கு திருச்சடைமுடியுடைய மஹாதேவர் என்றும் இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

இக்கோயில் நுழைவாயில் முன்புறமுள்ள தூண்களில் பல்லவ மன்னர்களான மூன்றாம் நந்திவர்மன் மற்றும் நிருபதுங்கனின் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. மூன்றாம் நந்திவர்மனின் பட்டத்தரசியாகிய ‘அடிகள் கண்டன் மாறம்பாவை’ கொடுத்த கொடைகளைப் பற்றி கூறுகின்றது

மதுரை கொண்ட கோபரகேசரி என்று அழைக்கப்படுகின்ற சோழமன்னன் முதலாம் பராந்தகனின் பல கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.

இவனுடைய 14 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலின் இறைவனை தென்கரை இடையாற்று நாட்டில் இருந்த திருச்சடைமுடி மஹாதேவர் என்று பெயர் இருந்தது என்பதை கூறுகின்றது.

பராந்தக மன்னனின் அரசியும், பழுவேட்டரையரின் மகளுமான அருண்மொழி நங்கையின் பரிவாரத்தில் இருந்த பெண் ஒருத்தி கொடுத்த தானம் பற்றி ஒரு கல்வெட்டு கூறுகின்றன. இக்கோயிலில் மாசிமகம் விழா எடுக்கப்படுவதைப் பற்றியும் பல கல்வெட்டுகள் பிற கொடைகளைப் பற்றியும் கூறுகின்றன.

இக்கோயில் கருவறையும், அர்த்தமண்டபமும் உடைய எளிமையான கோயிலாகும். விமானம் ஏகதள விமானம் ஆகும். ஆதிஷ்டானம் முதல் சிகரம் வரை கருங்கல்லால் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு விதமான பழுப்பு நிறக்கல்லில் கோயில் காட்சியளிக்கிறது. அழகிய நாட்டிய அணங்குகள், மத்தள கலைஞர்கள் போன்ற பல்வேறு நடன மற்றும் இசைக்கலைஞர்கள் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயில் அதிஷ்டானத்தில் இராமாயன நிகழ்ச்சிகளைக் கூறும் சிறுசிறு புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன.

முற்காலத்தில் இக்கோயில் கருங்கல் தூண்களின் துணையுடன் செங்கற்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்லவர்களின் தூண்கள் இங்கு உள்ளன. பராந்தகனின் காலத்திய இது கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோயில் பிடாரி கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 342 கி.மீ தொலைவில் தஞ்சாவூரில் இருயது சுமார் 32கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : தஞசாவூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 274/த.வ.ப. துறை/நாள்/27.08.87