Sorry, you need to enable JavaScript to visit this website.

பாறை ஓவியங்கள் - வேட்டைக்காரன் மலை

இவ்வூர் மக்கள் இம்மலையினைக் ‘காரை ஊத்துக்காடு’ என்றும் ‘வேடா பாத்தி’ என்றும் அழைக்கின்றனர். இம்மலையின் மீது சுமார் 2,500 அடி உயரத்தில் இயற்கையாக அமந்த குகைகள் காணப்படுகின்றன. வேடா பாத்தியில் காணப்படுகின்ற முதலாவது குகையில் தொல் பழங்கால மக்கள் வாழ்ந்திருக்கக் கூடும். இக்குகை சுமார் 20 அடி உயரமும், 300 சதுர அடி அகலமும் கொண்டு கிழக்கு மேற்காக அமையதுள்ளது. வெளிப்பகுதி விரிந்து உள்ளே 15 அடி அகலமும் 10 அடி நீளமும், 8 அடி உயரமும் உள்ள ஒழுங்கற்ற வட்ட வடிவமான அறை ஒன்று காணப்படுகிறது.

இக்குகையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் வெள்ளை வண்ணத்தில் (white ochre) தீட்டப்பட்டுள்ளன. குகையின் வெளிப்புறத்திலும், வலப்புறத்திலும் மற்றும் விதானப்பகுதியிலும் ஓவியங்ள் வரையப்பட்டுள்ளன. குகையின் முன் புறத்திள் மனித உருவங்கள்

நடனமாடும் நிலையில் தீட்டப்பட்டு காட்சித் தருகின்றன. மனித உருவங்களின் கால்களுக்கு அடியில் ஆண் யாணை ஒன்றும் அதன் தும்பிக்கையைத் தொட்டவண்ணம் ஒரு கலைமானும் காணப்படுகின்றன. ஆண் யாணையின் அடியில் ஒரு பெண் யாணையின் உருவம் அழகாகத் தீட்டப்பட்டுள்ளது. ஒரு விலங்கின் மேல் மனிதன் அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஓவியமும் காணப்படுகிறது. இது குதிரையாக இருக்கலாம். இதன் வால் பகுதி பிளவுற்றுக் காணப்படுகிறது.

குகையில் மேல்தட்டில் ஏழு மனித உருவங்கள் கைகோர்த்தபடி நடனமாடும் நிலையில் காணப்படுகின்றன. வலது கோடியில் ஒரு மனித உருவம் காணப்படுகிறது. கணித வடிவமைப்புகளும் (Mathematical Sign) வரையப்பட்டுள்ளன. குகையின் வலப்புறத்தில் விலங்கின் மேல் அமர்ந்த மனிதன் உருவம் ஒன்று காட்சியளிக்கிறது. இரண்டாவது குகை முதல் குகையினைப் போன்றல்லாமல் சுற்றிலும் படுக்கைகள் போன்ற அமைப்பை உள்ளடக்கிக் காணப்படுகிறது. இங்கு யாணையின் மேல் அமர்ந்த நிலையில் மித உருவம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. அருகில் ஒரு குதிரையின் மேல் ஒரு மனிதன் அமர்ந்த நிலையில், கையில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணமும், மற்றொரு கையில் ஈட்டி எறியும் நிலையிலும் ஒரு ஓவியம் காணப்படுகிறது. இதன் கீழ் ஒரு விலங்கின் மேல் மனிதன் அமர்ந்த நிலையில் மற்றொரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. இம்மனித உருவத்தின் ஒரு கை மேல் நோக்கியும், மற்றொரு கை விலங்கைப் பற்றிய வண்ணமும் உள்ளது.

இவ்விரண்டு குகைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு குதிரை வீரர்கள் நேருக்கு நேர் போரிடும் காட்சி வரையப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கையில் வில் அம்பு ஏந்திய வண்ணம் இருக்கின்றனர். மேற்கூறப்பட்டுள்ள ஓவியங்கள் அணைத்தம் வெள்ளை வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்களின் காலம் சுமார் கி.மு 400 - லிருந்து கி.மு 100 வரை இருக்கலாம் என்றுக் கருதப்படுகிறது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 511 கி.மீ தொலைவில்  உள்ளது.

வட்டம் : கோயம்புத்தூர்

அறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண் 310/த.வ.ப.துறை/நாள்/16.09.86