கலையும், பண்பாடும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டவை. தமிழகத்தின் மரபுக் கலைகளையும், பண்பாட்டினையும் பாதுகாத்திடல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும், இசைக்கலை, நாடகக் கலை, நாட்டியக் கலை, ஓவியக்கலை, சிற்பக் கலை ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் கவின் கலைக் கல்வி பயிலகங்கள் வாயிலாக கொண்டு செல்லவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த “கலை பண்பாட்டுத் துறை” என்ற ஒரு தனித் துறை டிசம்பர் திங்கள் 1991 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த அரசு சார்ந்த கலை அமைப்புகளையும், கலை நிறுவனங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்துடன், பொதுத்துறையின் கீழ் செயல்பட்டுவந்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டுவந்த தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு, தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் ஆகிய கலை அமைப்புகள் இத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. மேலும், கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த அரசு இசைப் பயிற்சி மையங்கள், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்த அரசு கைத்தொழில் கல்லூரிகள் மற்றும் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி ஆகியன இத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டன.