இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமிய கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறையின் மேம்பட்டிற்காக சிறப்பான சேவை செய்து வரும் புகழ் மிக்க கலைஞர்களை பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் கலைமாமணி என்ற மாநில விருது வழங்குதல் மற்றும் "பாரதி", "எம்.எஸ்.சுப்புலட்சுமி", "பாலசரசுவதி"ஆகியோர் பெயரில் அகில இந்திய அளவிலான விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல்.
தமிழக கலைப் பெருமைகளை இளைய தலைமுறையினர் உள்ளிட்ட அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் செவ்வியல் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்துதல் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்குதல்
நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிகக் கலைஞர்களுக்கு திங்கள்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2,000/- வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 13,563 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் நிதியாண்டிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.60,000/-த்திலிருந்து ரூ.72,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்ப வாரிசுதார்களுக்கு வழங்கப்படும் குடும்ப பராமரிப்பு தொகை (ஒருமுறை மட்டும்) தற்போது ரூ.6,000/-த்திலிருந்து ரூ.10,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 430 மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு ரூ.19.80 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கலைகளின் வாயிலாக தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தவும், பல்வேறு கலாச்சாரங்களையும், கலை வடிவங்களையும் கொண்ட இந்தியாவில், தமிழ் பண்பாட்டு மரபினையும், கலையினையும் பல்வேறு மாநில மக்களும் அறிந்து கொள்ள ஏதுவாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் செயல்படுத்தப்படும் கலைப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தமிழகத்தினை சார்ந்த 60 கலைக்குழுக்கள் வெளிமாநிலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். அதுபோன்று 3 வெளிமாநில கலைக்குழுக்கள் தமிழகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். தமிழக அரசின் நல்கை வாயிலாக தமிழகத்தினை சார்ந்த 1115 கலைஞர்கள் பயன்பெற்றுள்ளனர்.
நமது தமிழ்ப் பண்பாட்டினையும், கலைகளையும் அயல் நாடுகளில் பரப்பும் வண்ணமும்,அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் கலை பண்பாட்டுத் தாக்கத்தினையும்,கலை அனுபவங்களையும் தமிழ் வம்சாவழியினர் தொடர்ந்து பெறும் வகையிலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக ஓமன், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கலைக்குழுக்கள் சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்துள்ளனர்.
இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, குரலிசை, பரதநாட்டியம் மற்றும் கருவியிசை ஆகிய கலைகளில் பயிற்சியும், திறமையும் மிக்க இளங்கலைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மேடையேற்றம் செய்திட தன்னார்வக் கலை நிறுவனங்கள் வாயிலாக கலை நிகழ்ச்சிகள் நடத்திட ரூ.5000/- முதல் ரூ.10000/- வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1941 இளங்கலைஞர்கள் பயன்பெற்றுள்ளனர்.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் / ஆடை அணிகலன் வாங்குவதற்கு தனி நபருக்கு ரூ.2,000/-மும், கலைக் குழுக்களுக்கு ரூ.6,000/-மும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
நாடகக் கலையையும், அதில் ஈடுபட்டுள்ள நாடகக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில்,தமிழ்ப் பண்பாட்டினையும்,தமிழர்களின் வீரத்தினையும், தமிழ் இலக்கிய காட்சிகளையும் மையக் கருத்தாகக் கொண்டு தமிழர்களின் நீண்ட நெடிய வரலாறு குறித்த வரலாறு / புராண / சமூக நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திடவும், தமிழ் இலக்கியங்கள் மற்றும் பண்பாட்டை பின்னணியாகக் கொண்டு, தமிழில் சிறந்த நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திடவும், கலைக்குழுக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 47 நாடகங்கள், 33 நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கலைகள் குறித்த அரிய நூல்களை பதிப்பித்து, வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 109 புத்தகங்கள் பதிப்பித்திட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள் நடத்திட தேவையின் அடிப்படையில் வெளியூர்களுக்கு கலைஞர்கள் / கலைக்குழுக்கள் தொடர் வண்டியில் / தமிழ்நாடு அரசு பேரூந்துகளில் சென்று வருவதற்காக பயணக் கட்டணச் சலுகை மன்றத்தால் வழங்கப்பட்டு வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டில் 3347 கலைஞர்கள் அடங்கிய 379 குழுக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்.