ஒவியம், சிற்பம், பதிப்போவியம் ஆகிய கவின்கலைகளை வளர்க்கவும், பாதுகாக்கவும், பரப்பவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு அரசால் 1975 இல் தோற்றுவிக்கப்பட்டு, 2008 ஆம் ஆண்டு கலை பண்பாட்டு இயக்கத்துடன் இணைக்கப்பட்டது.
மரபுவழி, நவீனபாணி கலைப்பிரிவுகளில் சிறந்த சாதனைகள் புரிந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், கலைச்செம்மல் விருதுகள் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. கலைச்செம்மல் விருது பெறும் கலைஞர்களுக்கு செப்புப்பட்டயம் மற்றும் விருதுத் தொகையாக ரூ.50,000/- வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மரபுவழி பிரிவில் 16 ஓவிய, சிற்பக் கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி பிரிவில் 47 ஓவிய, சிற்பக் கலை வல்லுநர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், ஓவிய, சிற்பக் கலைகளை வளர்க்கவும், மாநில அளவில் மரபுவழி / நவீனபாணி பிரிவுகளில், ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்திட தமிழ்நாட்டிலுள்ள கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள் / சிற்பங்கள் பெறப்பட்டு, அவற்றிலிருந்து அரசால் அமைக்கப்படும் தெரிவுக் குழுவால் தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் / சிற்பங்கள் கலைக்காட்சியாக காட்சிப் படுத்தப்படுகின்றன. மரபுவழி / நவீனபாணி ஓவிய சிற்பக் கலைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கியும் ஊக்குவித்தும் வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட 30 மூத்தகலைஞர்களுக்கு (மரபுவழி / நவீனபாணி பிரிவில்) ரூ.15,000/- வீதமும், 30 வயதுக்குட்பட்ட 30 இளங்கலைஞர்களுக்கு (மரபுவழி / நவீனபாணி பிரிவில்) ரூ.10,000/- வீதமும் என 60 கலைஞர்களுக்கு ரூ.7.50 இலட்சத்திற்கு பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டு வருகின்றன.
திறமை படைத்த ஓவிய, சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஓவிய, சிற்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அடங்கிய கலைக் காட்சிகளை நடத்திட ஏதுவாக, தனிநபர் கலைக்காட்சி நடத்திட 10 கலைஞர்களுக்கு ரூ.25,000/- வீதமும், கலைஞர்கள் குழுவாக சேர்ந்து நடத்திட 5 கூட்டுக் கலைக்காட்சிக்கு ரூ.50,000/- வீதமும் திறமைமிக்க கலைஞர்களுக்கு நிதியுதவி அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஓவிய, சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், ஓவிய, சிற்பக் கலைஞர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது. தனி நபர் கலைக்காட்சி மற்றும் கூட்டுக் கலைக்காட்சி நடத்திட ஆண்டுதோறும் ரூ.5,00,000/- 2018-2019 ஆம் நிதியாண்டு முதல் இத்திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் இறுதியாண்டு முதுகலை பயிலும் 4 மாணவர்களுக்கு ரூ.5,000/-வீதமும், இளங்கவின்கலை பயிலும் 10 மாணாக்கர்களுக்கு ரூ.3,000/-வீதமும், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் இறுதியாண்டு முதுகவின் கலை பயிலும் 2 மாணாக்கர்களுக்கு ரூ.5,000/-வீதமும், இறுதியாண்டு இளங்கவின்கலை பயிலும் 10 மாணாக்கர்களுக்கு ரூ.3,000/-வீதமும், என 26 சிறந்த மாணவர்களுக்கு மொத்தம் ரூ.90,000/- படிப்புதவித் தொகை ஆண்டுதோறும் கல்லூரி முதல்வர்களின் பரிந்துரையின்படி வழங்கப்படுகிறது.