கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளியில் அரசு நிதியுதவி பெறும் கல்லூரியாக செயல்படும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில், பாரம்பரிய இசை, நடனம் மற்றும் நுண்கலைகளை வளர்த்திடும் நோக்கில், பரதநாட்டியம், குரலிசை, வயலின், வீணை மற்றும் மிருதங்கம் ஆகிய பாடப் பிரிவுகளில் ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு பட்டப் படிப்புகளும், மூன்றாண்டு இளங்கலைப் பட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுகலை பட்டப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும், நெறியாளர்களின் வழிகாட்டுதலில், ஆய்வாளர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வும், முனைவர் பட்ட ஆய்வும் இக்கல்லூரியில் மேற்கொள்ளப்படுகிறது. இக்கல்லூரியில், மாணவ, மாணவியர்களின் இசைப்பயிற்சி, நடனப்பயிற்சிக்கு ஏற்ற வகையில் ஒலி, ஒளி நூலகம், ஒலி-ஓளி பதிவுக்கூடங்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரியின் நிர்வாகம் கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டிலும், நிதியுதவி கல்லூரி கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலும் என இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
2017-2018 ஆம் ஆண்டிலிருந்து இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசால் திங்கள் ஒன்றுக்கு ரூ.500/-வீதம் ஆண்டொன்றுக்கு பத்து திங்கள்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.