மாணாக்கர்களிடையே கலை ஆர்வத்தை வளர்த்திடும் வகையில், குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது பிரிவினர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு, அப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
மாவட்டக் கலைப்போட்டிகள் முடிவுற்றவுடன் அப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது பிரிவு மாணாக்கர்களிடையே மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாநில அளவிலான போட்டிகளில் முதல் பரிசாக 8 மாணாக்கர்களுக்கு ரூ.10,000/-, இரண்டாவது பரிசாக 8 மாணாக்கர்களுக்கு ரூ.7,500/- மற்றும் மூன்றாவது பரிசாக 8 மாணாக்கர்களுக்கு ரூ,5,000/- என மொத்தம் 24 மாணாக்கர்களுக்கு ரூ.1,80,000/-த்திற்கு பரிசுத் தொகைகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும், மாநில போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் பங்குபெற்றமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
மாணாக்கர்கள் கோடை விடுமுறையை பயன்தரும் வகையில் கழிக்க ஏதுவாக, சென்னை மற்றும் தமிழகத்தின் அரியலூர், திருப்பூர் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அளவில் கோடைக்கால கலைப்பயிற்சி முகாம்கள் 30 மாவட்டங்களில் 2019-2020 ஆம் ஆண்டில் 26.04.2019 முதல் 15.05.2019 வரையிலும் நடத்தப்பட்டன.
புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தால் தேசிய பாலஸ்ரீ விருதிற்கான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியானது மேடைக்கலை, படைப்புக்கலை, அறிவியல் கலை மற்றும் எழுத்துக்கலை ஆகிய நான்கு வகையான முதன்மைக் கலைகளை உள்ளடக்கிய 16 வகை கலைகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதற்கட்டமான மாவட்ட அளவிலான போட்டிகளும், அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளும், அதில் தெரிவு பெறுபவர்களிடையே தேசிய அளவிலான போட்டிகளும் நடத்தப்பட்டு, தகுதியும், திறமையும் வாய்ந்த சிறார்களுக்கு “தேசிய பாலஸ்ரீ விருது” தேசிய சிறுவர் மன்றத்தால் வழங்கப்படுகிறது. இவ்விருதானது சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். மாவட்ட அளவிலான போட்டிகள் மாநில அரசின் நிதியுதவியிலும், மாநில அளவிலான போட்டிகள் புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தின் நிதியுதவியிலும் நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான போட்டிகள் புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தில் நடத்தப்படுகிறது.
ததமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் குளிர்காலம் மற்றும் கோடைக்கால விடுமுறைகளில் 10 நாட்கள் மாநில அளவிலான கலைப் பயிற்சி முகாமாக நடத்தப்படுகிறது. இம்முகாம்களில் தமிழகத்தில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 100 மாணவர்கள் பங்கு பெறுவார்கள். இம்முகாமில் பரதநாட்டியம், குரலிசை, ஓவியம்,கைவினை, நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் கலைப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் காலாண்டு விடுமுறையில் 10 நாட்கள் மாநில அளவிலான கைவினை கலைப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் தமிழகத்தில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 100 மாணவர்கள் பங்கு பெறுவார்கள். ஓவியம், கைவினை, மண்ணிலான கலைப் பொருட்கள் செய்தல், துணி ஓவியம், மெழுகுவர்த்தி செய்தல் மற்றும் பொம்மை செய்தல் உள்ளிட்ட கலைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.