எங்களை பற்றி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 14.04.1971 அன்று வாரியச் சட்டம் 1970-ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வ நிறுவனமாகும். தமிழகத்தின், சென்னை பெருநகர வளர்ச்சிப் பகுதிகளைத் தவிர்த்து, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தைச் சார்ந்ததாகும். வாரியம் தனது சேவையின் எல்லையை விரிவாக்கம் செய்து பெரிய அளவிலான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் பராமரிப்பையும் தன்னுள் கொண்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிறுவன அமைப்பின் தலைவராக முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., அரசு முதன்மை தலைமைச் செயலாளர், அவர்களும், திரு.வி.தட்சினாமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேலாண்மை இயக்குநராகவும் உள்ளார்கள். மேலும், அரசு துறைகளின் உயர்மட்ட இத்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், இணை மேலாண்மை இயக்குநர், நிதி மற்றும் பொறியியல் இயக்குநர்கள் அடங்கிய வாரிய இயக்குநர்களின் ஊக்கத்தினாலும் மற்றும் சீரிய வழிகாட்டுதலினாலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் உந்தப்படுகின்றன. மேலும், மேலாண்மை இயக்குநர் அவர்கள், இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் கீழ்காணும் 3 இதர பிரிவு தலைமைகளின் உதவியுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் நிர்வகிக்கிறார்.

  • பொறியியல் பிரிவிற்கு தலைமை வகிக்கும் பொறியியல் இயக்குநர்
  • கணக்கு மற்றும் தணிக்கை பிரிவிற்கு தலைமை வகிக்கும் நிதி இயக்குநர்
  • நிர்வாகப் பிரிவிற்கு தலைமை வகிக்கும் செயலாளர் மற்றும் பொது மேலாளர்.

தலைமை அலுவலகத்தில் உள்ள திட்ட மேம்பாட்டு பிரிவு (Project Development Cell), திட்ட நிர்வாகப் பிரிவு (Project Management), ஒப்பந்த நிர்வாகப் பிரிவு (Contract Management), இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு (Operation & Maintenance), பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்ட கண்காணிப்பு பிரிவு (MEGA Project Monitoring ) மற்றும் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் பயிற்சி பிரிவுகள் ஒவ்வொன்றும் ஒரு இணைத் தலைமைப் பொறியாளரின் கீழ் சிறப்புடன் செயப்படுகின்றது.

வேலூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு நான்கு தலைமைப் பொறியாளர்கள் உள்ளனர். வாரியத்தின் திறன்பட்ட செயல்பாடு கீழ்காணும் பிரிவுகளின் சீரான பணிகளால் உறுதி செய்யப்படுகிறது.

  • மேற்பார்வைப் பொறியாளர் தலைமையிலான 16 வட்ட அலுவலகங்கள்
  • நிர்வாகப் பொறியாளர் தலைமையிலான 85 கோட்ட அலுவலகங்கள்
  • உதவி நிர்வாகப் பொறியாளர் தலைமையிலான 258 உப கோட்டம அலுவலகங்கள்
  • சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள பயிற்சி மையங்கள்.
  • கோயம்புத்தூர் (1999), மதுரை (2001), திருச்சி (2014) மற்றும் திண்டிவனம் (2014) ஆகிய 4 இடங்களில் உள்ள கட்டுமான பொருள் தர கட்டுப்பாடு பரிசோதனை கூடங்கள்

மேலும் மாநில அளவிலான ஒரு நீர் பரிசோதனைக் கூடம், 31 மாவட்ட, 56 துணை மாவட்ட மற்றும் 25 ஒன்றிய அளவிலான பரிசோதனைக் கூடங்கள் என மொத்தமாக மாநிலத்திலுள்ள 113 குடிநீர் பரிசோதனைக் கூடங்கள் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய உதவுகின்றன. மாநில நீர் பரிசோதனைக் கூடத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கள நீர் பரிசோதனைக் கருவி (Field water testing kit), சமூக அளவில் நாடு முழுவதும் பெருவாரியாக பயன்படுத்தப்படுவதுடன் குடிநீர் தரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தாக்கம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள நிலநீர் பிரிவு, நீர் ஆதாரங்களின் நீடித்த நிலைத்த தன்மையை அதிகரிக்கச் செய்ய அறிவியல் ரீதியான நிலத்தடி நீர் கண்டறிதல், பயன்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றுடன் மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றையும் மேற்கொள்கிறது. நீராதாரங்களை குறிக்கும் வரைபடங்கள், ஒன்றிய அளவிலான நிலத்தடி நீர் வளங்களை குறிக்கும் வரைபடங்களை தயாரித்தல், பாதுகாப்பான அளவில் நீரை கையாளுவதற்கான ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் இதர ஆராய்ச்சி பணிகளை செய்ய புவியியல் தகவல் முறை (GIS) மற்றும் தொலையுணர்வு நுட்பம் (Remote Sensing) ஆகியவற்றை பயன்படுத்த இப்பிரிவு வழிகாட்டுகிறது.

மின்னணு தரவு செயலாக்க பிரிவு (EDP), வாரியத்தில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பயன்பாடுகளை (applications) முன்னின்று செயல்படுத்தி வருகிறது. தகவல் தேவைகள், வலைதளத்தின் மூலம் கீழ்கண்ட இணைய வழி மின் ஆளுமை அமைப்புகள் வாயிலாக வழங்கப்படுகின்றன.

  • தகவல் மேலாண்மை அமைப்பு சார்ந்த மின் ஒப்பந்தபுள்ளி, திட்ட மேலாண்மை, கூட்டுக் குடிநீர்த் திட்ட பராமரிப்பு, மனிதவள மேலாண்மை, நிதி மேலாண்மை, இணைய வழி ஆய்வு கண்காணிப்பு போன்றவை.
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வலைதளம் மற்றும் மழைநீர் சேகரிப்பு வலைதளம் ஆகியவற்றின் மூலம் மக்களுக்கு தகவல்களை பரப்புதல்.
  • வாரியத்திற்கான கட்டுமான பொருள் குறித்த தரகட்டுப்பாடு தகவல் அமைப்பு
  • அனைத்து அலுவலகங்களிலும், நீர் பரிசோதனைக் கூடங்கள் உட்பட, இணையதள வசதி
  • பத்து இடங்களில் காணொலி கூட்டங்களுக்கு வசதி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள பல பிரிவுகளும் சுமூகமாக ஒன்றிணைந்து சீரிய முயற்சியினால் அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்த இலக்குகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றுகின்றன.

எதிர்வரும் வாய்ப்புகளையும் புதிய சூழ்நிலைகளையும் வாரியம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மாற்றங்களை தழுவிச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளி உதவி இல்லாமலேயே தன் நிறுவனத்தின் திறன் கொண்டு திட்டங்களை வடிவமைத்தல், மதிப்பிடுதல், செயல்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்கிறது. வாரியத்தின் அர்ப்பணிப்பான செயல்பாடுகள் தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோக்கியே உள்ளது. தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் கீழ்கண்ட தனித்துவங்களை பெற்றுள்ளது.

  • குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று துறையில் திறமையான சேவைகளை வழங்கியமைக்காக மத்திய/மாநில அரசுகள் மட்டுமல்லாமல் சர்வதேச/தேசிய அமைப்புகளிடமிருந்து பல பராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றுள்ளது.
  • கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உள்ள கட்டுமான பொருட்கள் தர கட்டுப்பாடு பரிசோதனை கூடங்கள் NABL சான்றிதழ் பெற்றுள்ளன.
  • சென்னையில் உள்ள மாநில குடிநீர் பரிசோதனைக் கூடம் NABL சான்றிதழ் பெற்றதுடன் மாநில அளவிலான வழிகாட்டி பரிசோதனைக் கூடமாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களான ஒகேனக்கல் மற்றும் வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.