ஒகேனக்கல் WS & FMP
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,582 கிராமப்புற குயிருப்புகளில் உள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இரண்டும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளாகவும் மற்றும் இந்த இரண்டு மாவட்டங்களின் நிலத்தடி நீர் ஆதாரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1.50 மில்லி கிராம் / லிட்டர் அளவுக்கு அதிகமான புளோரைடு மற்றும் நைட்ரேட், கடினத்தன்மை, இரும்பு காரணமாக ஏற்படும் பிற தரம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 56% குடியிருப்புகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 48% குடியிருப்புகளும் வரையறுக்கப்பட்ட அளவான லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் என்ற அளவை விட அதிகமாக உள்ளது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மக்கள் புளோரைடு அதிகமுள்ள குடிநீரை பருகுவதால் பல், எலும்பு மற்றும் எலும்பு அல்லாத ஃபுளோரோசிஸ் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நிரந்தரத் தீர்வாக, புளோரைடு பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகளுடன் கூடிய நிலையான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை வழங்குவது கட்டாயமாகிறது.
ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் தனித்துவமான அம்சங்கள் :
- ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் தரமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதுடன், புளோரைடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் இத்திட்டத்தின் சீரிய பராமரிப்புக்கு பொதுமக்களின் திறன் மேம்பாடு செய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இத்திட்டத்தின் தலைமை பணியிடம் ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் மிகக் குறைந்த நீரோட்டத்தின் போதும், வடிவமைக்கப்பட்ட அளவான நாளொன்றுக்கு 160 மில்லியன் லிட்டர் இயல்புநீர், நீர் உள்வாங்கும் கிணற்றில் (Intake structures) இருந்து எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வன பகுதியில் உள்ள ‘யானை பள்ளம்’ என்று அழைக்கப்படும் இடத்தில் 160 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
- இயல்பு நீரில் உள்ள மாசுக்களை அகற்றும் நீர் தெளிவு தொட்டிக்கு (கிளாரி-ஃப்ளோகுலேட்டர்) பதிலாக மின்சாரம் உதவியில்லாமல் இயங்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கசடு நீர் அகற்றும் நீர் தெளிவு தொட்டி (பிளாட் பாட்டம் ஸ்லட்ஜ் பிளாங்கட் கிளாரிஃபையர்) இத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மணல் தெளிவு தொட்டி (Filter bed) சுத்தப்படுத்தபடும் நீர் மற்றும் நீர் தெளிவிப்பான் (Clarifier) தொட்டியிலிருந்து வெளிவரும் கசடு நீரும் மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தில் தலைமை பணியிடம், நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீர் உந்து நிலையம் ஆகியவற்றிற்க்கு தடையில்லாத மின்சாரம் பெறும் வகையில் இரட்டை தடம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
- தலைமை பணியிடத்திலிருந்து 11.15 கிமீ தொலைவில் மற்றும் 200 மீ உயரத்தில் அமைந்துள்ள 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான சமநிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சாத்தியமான இடங்களுக்கு புவியீர்ப்பு விசையின் கீழ் இயங்கும் குழாய்கள் அமைத்து அதன் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இத்திட்டம் ஆற்றல் திறன்மிக்கதாக திட்டமாக உள்ளது.
- இத்திட்டத்தில் திறமையான செயல்பாடு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யும் தொலைத் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் இணைப்புடன் SCADA அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
- க் மூலம் மிக உயரமான பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்கும் குடிநீர் வழங்கும் வகையில், ஏறத்தாழ, 1000 மீட்டர்க்கும் அதிகமான உயரத்திற்கு பல்வேறு நிலைகளில் நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. (+MSL 1245.186 M)
- தளி மற்றும் கெளமங்கலம் வனபகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் பிற வன விலங்குகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் வனபகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
நிர்வாக அனுமதி :
தமிழ்நாடு அரசு ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்திற்கு காவிரி நதியை ஆதாரமாக கொண்டு அரசு ஆணை எண். 19, நாள்: 29.01.2010-ன் படி ரூ.1928.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தவும் மற்றும் ரூ. 63.67 கோடி மதிப்பீட்டில் ஆண்டு பராமரிப்பு செலவிற்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி உதவி :
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம் மூலம் நிதி அமைப்பு 2008 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி முதல் கட்டமாக ரூ.873.09 கோடிக்கும், இரண்டாம் கட்டம் 2009 மார்ச் 31 ஆம் தேதி ரூ.712.51 கோடிக்கும் மொத்தம் ரூ.1585.60 கோடிக்கு கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் மாநில அரசின் குறைந்த பட்ச தேவைதிட்டம் மூலம் மாநில பங்காக ரூ.307.48 கோடியும், நகர்புற மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பங்கு தொகையாக ரூ.35.72 கோடி ஆகியவற்றுடன் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு தொகை ரூ.1928.80 கோடி ஆகும்.
திட்ட விவரங்கள் :
இத்திட்டம் மூன்று கூறுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. (i) குடிநீர் வழங்கல் (ii) புளோரைடு பாதிப்பு குறைத்தல் மற்றும் (iii)சீரான பராமரிப்புக்காக உள்ளாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்துதல்.
I.குடிநீர் வழங்கல் விவரங்கள் :
இத்திட்டத்தினை செவ்வனே செயல்படுத்தும் வகையில் 5 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு I:
இத்தொகுப்பில் தலைமை பணியிடம், நீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் உந்து நிலையம், இயல்பு நீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீருந்துக் குழாய் 11.139 கி.மீ பெரிய சமநிலை நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் விநியோக கண்காணிப்பு கட்டமைப்பு ( SCADA) ஆகிய பணிகள் உள்ளடங்கி உள்ளது. ஒகேனக்கல் கிராமத்தில் உள்ள லாட்ஜ்கள், சமுதாயக் கழிப்பறைகள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவு நீரை சேகரித்து சுத்திகரிக்கும் வகையில், நீர் ஆதாரத்திற்கு மாசு ஏற்படுவதைத் தவிர்க்க பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தொகுப்பு II:
இத்தொகுப்பில் மடத்திலுள்ள பிரதான சமநிலை நீர்த் தேக்க தொட்டியிலிருந்து ஊத்தங்கரை வரை 2,435 கி.மீ., நீளத்திற்கு, பிரதான குழாய் மற்றும் நீர் கடத்தும் குழாய்கள் மூலம் தர்மபுரி நகராட்சி, 2 பேரூராட்சிகளான பென்னாகரம், ஊத்தங்கரை மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களான பென்னாகரம் (பகுதி), ஏரியூர், தருமபுரி (பகுதி), நல்லம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ள 1,876 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பின் மூலம் பயன்பெறும் மக்கள் தொகை 10.35 லட்சம் ஆகும்.
தொகுப்பு III:
தொகுப்பு II பிரதான குழாயில் இருந்து தொகுப்பு III –க்கான குடிநீர் பிரித்து எடுக்கப்பட்டு 1,771 கிமீ நீளத்திற்கு பிரதான குழாய் மற்றும் நீர் கடத்தும் குழாய்கள் மூலம் 5 பேரூராட்சிகளான பி.மல்லாபுரம், அரூர், கடத்தூர், கம்பைநல்லூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 5 ஊராட்சி ஒன்றியங்களான தர்மபுரி (பகுதி), மொரப்பூர், அரூர், கடத்தூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ள 1,190 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பின் மூலம் பயன்பெறும் மக்கள் தொகை 6.38 லட்சம் ஆகும்.
தொகுப்பு IV:
மூங்கில்பட்டியில் உள்ள பொதுவான நீருந்து நிலையத்திலிருந்து தின்னூர் வரையிலான 3,228 கிமீ நீளத்திற்கு பிரதான குழாய் மற்றும் நீர் கடத்தும் குழாய்கள் மூலம் ஓசூர் மாநகராட்சி, 2 பேரூராட்சிகளான கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களான காரிமங்கலம் (பகுதி), வேப்பனப்பள்ளி, கெலமங்கலம், தளி, சூளகிரி மற்றும் ஓசூர் ஒன்றியங்களில் உள்ள 1866 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகுப்பின் மூலம் பயன்பெறும் மக்கள் தொகை 9.27 லட்சம் ஆகும்.
தொகுப்பு V:
இத்தொகுப்பில் மடத்திலுள்ள பிரதான சமநிலை நீர்த் தேக்க தொட்டியிலிருந்து பர்கூர் வரை 3,095.25 கிமீ நீளத்திற்கு பிரதான குழாய் மற்றும் நீர் கடத்தும் குழாய்கள் மூலம் கிருஷ்ணகிரி நகராட்சி, 7 பேரூராட்சிகளான காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பர்கூர், காவேரிப்பட்டினம், நாகோஜனஹள்ளி மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களான பென்னாகரம் (பகுதி), பாலக்கோடு, காரிமங்கலம் (பகுதி), பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டினம் ஒன்றியங்களில் உள்ள 2,650 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் மக்கள் தொகை 10.20 லட்சம் ஆகும்.
புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் :
வீடு கணக்கெடுப்பு, பள்ளிகள் மற்றும் சமூக அடிப்படையிலான அணுகு முறைகள் மூலம் விரிவான மும்முனை நன்கு வரையறுக்கப்பட்ட செயல்பாடுகள் மூலம் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஃப்ளோரோசிஸ் (பல், எலும்பு மற்றும் எலும்பு அல்லாத ஃப்ளோரோசிஸ்) தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தருமபுரி திட்டத் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தை செயல்ப்படுத்த இணை இயக்குநர் (மருத்துவப் பணியாளர்) பதவியில் நியமிக்க அரசு ஆணை எண் 367/ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை/ நாள்: 12.06.2015 வழங்கப்பட்டது. இந்த ஆணையின் படி புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் பொது மற்றும் தடுப்பு மருத்துவத் துறையின் பிரதிநிதியாக இணை இயக்குநர் (சுகாதாரம்) 31.07.2017 வரை நியமிக்கப்பட்டது.
புளோரைடு பாதிப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், சுகாதார ஆய்வு செய்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட செயல்பாடுகளின் விவரங்கள் கீழ்காணுமாறு.
1.பல், எலும்பு மற்றும் எலும்பு அல்லாத ஃப்ளோரோசிஸின் அடையாளம் மற்றும் கண்டறிதல் குறித்த பயிற்சி :
மருத்துவர்கள் | பள்ளி ஆசிரியர்கள் | செவிலியர்கள் | அரசு சாராத தொண்டு நிறுவனங்கள் |
---|---|---|---|
828 | 3785 | 418 | 1887 |
2.மருத்துவர்களுக்கான சிறப்புப் பயிற்சி :
ஊட்டச்சத்து | பற்சீரமைப்பு அறுவை சிகிச்சை |
---|---|
10 மருத்துவர்கள் | 27 பல் மருத்துவர்கள் |
3.பல், எலும்பு மற்றும் எலும்பு அல்லாத ஃப்ளோரோசிஸ் பரவல் குறித்த சுகாதார ஆய்வு
பள்ளி மாணவர்கள் | வீடு கணக்கெடுப்பு |
---|---|
4,24,047 | 6,67,224 |
4.மருத்துவ முகாம்கள் மற்றும் நுண்ணூட்ட மாத்திரைகள் வழங்கல்
நுண்ணூட்ட மாத்திரைகள் வழங்கல் | மருத்துவ முகாம்கள் |
---|---|
190.67 லட்சம் மாத்திரைகள் | 36 எண்கள் |
5.ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் :
சிறுநீர் சீரம் மற்றும் தண்ணீரை சோதிக்க ION மீட்டர்கள் | பல் சிகிச்சை நாற்காலிகள் | தானியங்கி பகுப்பாய்வி இயந்திரம்( Auto Anlyser machine) | சி-ஆர்ம் நாற்காலிகள் |
---|---|---|---|
10 எண்கள் | 17 எண்கள் | 3 எண்கள் | 1 எண்கள் |
6.பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பல் சீரமைப்பு சிகிச்சை விவரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி ஒன்றியம் | தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியம் |
---|---|
34 மாணவிகள் | 34 மாணவிகள் |
7.எலும்பு அல்லாத ஃப்ளோரோசிஸ் நோய்க்கான ஆய்வு விவரம்
(அ) அடிப்படை ஆய்வு /1வது சுற்று
வகைப்படுத்தப்பட்ட நபர்கள் - எலும்பு அல்லாத ஃப்ளோரோசிஸ் | அடிப்படை சிறுநீர் பகுப்பாய்வு F>1mg/லிட்டர் கொண்ட நபர்கள் |
---|---|
39392 எண்கள் | 25325 எண்கள் |
(ஆ) 2வது சுற்று சிறுநீர் பகுப்பாய்வு (3 மாத அடிப்படை பகுப்பாய்வுக்குப் பிறகு)
இலக்கு | சிறுநீர் பகுப்பாய்வு முடிந்தது * | F<1mg/லிட்டர் உள்ள நபர்கள் | % குறைப்பு உள்ள நபர்கள் |
---|---|---|---|
25325 எண்கள் | 25164 எண்கள் | 15818 எண்கள் | 63% |
*இறப்பு -68 எண்கள் & இடம்பெயர்ந்தவர்கள் -93 எண்கள்
(இ) 3வது சுற்று சிறுநீர் பகுப்பாய்வு (8 மாத அடிப்படை பகுப்பாய்வுக்குப் பிறகு)
இலக்கு | சிறுநீர் பகுப்பாய்வு முடிந்தது * | F<1mg/லிட்டர் உள்ள நபர்கள் | % குறைப்பு உள்ள நபர்கள் |
---|---|---|---|
25325 எண்கள் | 25155 எண்கள் | 20309 எண்கள் | 81% |
*இறப்பு -104 எண்கள் & இடம்பெயர்ந்தவர்கள் -66 எண்கள்
உள்ளாட்சி அமைப்புகளின் திறன் மேம்படுத்துதல் :
மண்டல அளவிலான மக்கள் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஒகேனக்கல் குடிநீர் திட்ட தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் ஜனவரி 2014 அன்று நிறுவப்பட்டது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 584 உள்ளாட்சி அமைப்புகளின் திறன் மேம்பாடு மற்றும் பராமரிப்பு நிதி மேலாண்மை மேம்பாடு செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டம் மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்துராஜ் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
திட்ட பணிகள் நிறைவு விவரங்கள் :
ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 29.05.2013 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சார்ந்த 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,582 கிராமப்புற குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், தினமும் சராசரியாக 145 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.