மேலூர் கூட்டு குடிநீர்த் திட்டம்
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், திருநகர், விளாங்குடி, பரவை, அ.வெள்ளாளப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 6 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1430 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பேரூராட்சியில்உள்ள மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட மற்றும் தரமான குடிநீர் வழங்குவதற்காக, மேலூர் கூட்டு குடிநீர்த் திட்டம் காவிரி ஆற்றினை ஆதாரமாக கொண்டு ரூ.784.00 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. (தற்பொழுது அவனியாபுரம் நகராட்சி, திருநகர், விளாங்குடி பேரூராட்சிகள் மற்றும் 113 ஊரகக் குடியிருப்புகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.)
இத்திட்டம் ஊரகப் பகுதிகளுக்காக மத்திய அரசின் நிதியான தேசீய ஊரக குடிநீர் திட்டத்தில் ரூ.189 கோடியும் (NRDWP), தமிழக அரசின் மானிய நிதியான குறைந்த பட்ச தேவை திட்டத்தின் கீழ் ரூ.311.45 கோடியும் (MNP) , நகர்புற பகுதிகளுக்காக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.201.26 கோடியும் (JnNURM), சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (UIDSSMT) ரூ.3.28 கோடியும், வைப்பு நிதியின் கீழ் (Deposit) ரூ.49.38 கோடியும் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பாக ரூ.29.63 கோடியும் நிதி உதவி பெற்று செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இத் திட்டம் , இடைக்கால வருடமான 2027ல் 13.94 இலட்சம் மக்கட் தொகையும், உச்ச கட்ட வருடமான 2042ல் 15.92 இலட்சம் மக்கட் தொகையும் பயன்பெறும் வகையில் நாளொன்றுக்கு முறையே 64 மில்லியன் லிட்டர் மற்றும் 84 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது இரண்டு சிப்பங்களாக கீழ்வருமாறு செயல்படுத்தப்பட்டுள்ளது.
சிப்பம் - I
கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் காவிரி ஆற்றில் 3 நீர் சேகரிப்பு கிணறுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 84 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு மேட்டுமகாதானபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்டத் தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து 101 கி.மீ தொலைவில் உள்ள கோட்டையூர் நீர் தேக்கத் தொட்டிக்கு 1100 மி.மீ விட்டமுள்ள நீர்உந்து குழாய்கள் மூலமாக சின்னரெட்டிப்பட்டி, பன்னாங்கொம்பு ஆகிய நீருந்து நிலையங்கள் வழியாக நீர் உந்தப்பட்டு கோட்டையூர் நீர் தேக்கத் தொட்டியில் நீர் சேகரிக்கப்படுகிறது.
சிப்பம் - II
கோட்டையூர் நீர் தேக்கத் தொட்டியிலிருந்து 105 கி.மீ நீளமுள்ள தன்னோட்ட குழாய்கள் மூலமாக திருமங்கலம் தரைமட்ட தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. மேலும் இத்திட்டத்திற்காக 2294 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, 329 தரைமட்ட தொட்டிகள் மூலமாக குடிநீர் சேகரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள 1520 மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட 72 மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாகவும் ஏற்கனவே உள்ள 2468 கி.மீ. பகிர்மானக் குழாய்களுடன் கூடுதலாக 76 கி.மீ நீளமுள்ள புதிய பகிர்மான குழாய்கள் மூலமாகவும் குடிநீர் விnயhகிக்கப் படுகிறது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு முறையே 29.12.2011 அன்று சிப்பம் I மற்றும் சிப்பம் I ல் வழங்கப்பட்டது. இக்கூட்டு குடிநீர்த் திட்டத்தின் அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு வாரிய பராமரிப்பில் உள்ளது. தற்பொழுது இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1430 ஊரக குடியிருப்புகளுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது 74.76 மில்லியன் லிட்டர் என்ற அளவில் குடிநீர் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.