திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள (தற்போது தென்காசி மாவட்டம் ) சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் அரசு ஆணை எண் 6, நாள் 30.01.2017 இல் மத்திய, மாநில அரசுகள், அம்ருத் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் நிறைவேற்ற 543.20 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் இடைக்கால ஆண்டு(2032) மற்றும் உச்சகால ஆண்டில் (2047) 5.18 மற்றும் 6.21 இலட்சம் மக்களுக்கு முறையே நாளொன்றுக்கு 46.08 மில்லியன் லிட்டர் மற்றும் 61.98 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகராட்சிகளுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதமும், பேரூராட்சிக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படுகின்றது.
இக்கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான இயல்பு நீர் கொண்டாநகரம் அருகே தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் எடுக்கும் கிணறு (Intake well) மூலம் சேகரிக்கப்படுகிறது. அதன் பிறகு, இயல்பு நீரை சுத்திகரிக்கும் பொருட்டு கொண்டாநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 46.08 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 3.98 கி.மீ நீளம் குழாய்கள் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது.
சுத்திகரிக்கப்ப்ட்ட நீரானது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 23.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மானூரில் அமைந்துள்ள முதலாவது நீர் உந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 23.20 இலட்சம் லிட்டர் தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கும், மானூரிலிருந்து பனவடலிசத்திரத்தில் அமைந்துள்ள இரண்டாவது நீர் உந்து நிலையத்திலுள்ள 23.20 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கும், பனவடலிசத்திரத்திலிருந்து சங்கரன்கோவிலில் அமைந்துள்ள மூன்றாவது நீர் உந்து நிலையத்தில் உள்ள 25.70 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கும் 62.08 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது.
பின்னர் சங்கரன்கோவில் நீர் உந்து நிலையத்திலிருந்து புளியங்குடி நகராட்சி (4.35 இலட்சம் லிட்டர்), இராஜபாளையம் நகராட்சி (9.10 இலட்சம் லிட்டர்), திருத்தங்கல் நகராட்சி- (3.90 இலட்சம் லிட்டர்) மற்றும் திருவேங்கடம் பேரூராட்சி (0.65 இலட்சம் லிட்டர்) அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு 107.36 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 22 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் பயனில் உள்ள 33 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு 53.29 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது. அங்கிருந்து புதியதாக அமைக்கப்பட்டுள்ள 548.59 கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் ஏற்கெனவே பயனில் உள்ள பகிர்மான குழாய்கள் மூலம் 1,12,749 வீட்டு இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தினை செயல்படுத்த பணி ஆனை 06.11.2017 அன்று வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4.62 இலட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 38.42 மில்லியன் லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.