விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அருப்புக்கோட்டை, சாத்தூர், மற்றும் விருதுநகர் நகராட்சிகளுக்கான தாமிரபரணி ஆற்று நீரை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம்.
இத்திட்டம் 2017-2018 ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் குடிநீர் வழங்கும் திட்ட அறிவிப்பு எண் 36ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டமாகும்
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அருப்புக்கோட்டை, சாத்தூர், மற்றும் விருதுநகர் நகராட்சிகளுக்கான தாமிரபரணி ஆற்று நீரை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண். 147/ நாள் 13.11.2019ல் ரூ.444.71 கோடிக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்ட நிதி (IUDM) மற்றும் வீட்டு வசதி நகர்ப்பற வளர்ச்சி நிறுவன (HUDCO) கடனுதவியின் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டதின் மூலம் இடைக்கால (2035) மக்கள் தொகையின் படி, 2.33 இலட்சம் மக்களுக்கு 22.90 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2050) மக்கள் தொகையின் படி 2.60 இலட்சம் மக்களுக்கு 26.94 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே இம்மூன்று நகராட்சிகளில் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் நகராட்சிகளுக்கு தாமிரபரணி ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்ட 239 கடலோர குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சாத்தூர் நகராட்சிக்கு தாமிரபரணி ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்ட கயத்தார் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, மேற்கண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான வடிவமைக்கப்பட்ட கூடுதல் குடிநீர்த் தேவையான 28.28 மில்லியன் லிட்டர் அளவு மேற்பரப்பு நீரை தாமிரபரணி ஆற்றில் தாமிரபரணி மற்றும் சிற்றாறு நதிகள் கலக்குமிடத்தில், சீவலப்பேரி தடுப்பணைக்கு முன்பாக 8 மீட்டர் விட்டமுள்ள ஒரு உள்எடுக்கும் கிணறு மூலமாக எடுத்து ஆற்றின் கரையோரமாக உள்ள சீவலப்பேரி கிராமத்தில் அமையப்படவுள்ள 24.04 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது. பின்னர் 152.390 கி. மீ நீரேற்று குழாய்கள் மூலம் சில்லான்குளம், வன்னிமடை மற்றும் சென்னல்குடி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள இடைநிலை நீருந்து நிலையங்களில் நீர் உந்தம் செய்யப்பட்டு நகராட்சிகளில் உள்ள 3 எண்ணம் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி களில் குடிநீர் சேகரிக்கப்படவுள்ளது. பின்னர் 23.74 கி. மீ நீரேற்று குழாய்கள் மூலம் இம்மூன்று நகராட்சிகளில் அமைந்துள்ள பயன்பாட்டில் உள்ள மற்றும் புதியதாக அமையவுள்ள 5 எண்ணம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றப்படுகின்றது. மீண்டும் 261.572 கி. மீ பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
இத்திட்டம் 3 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, 3 சிப்பங்களுக்கும் 28.09.2020 ல் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 75 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு மிதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இத் திட்டத்தின் அனைத்து பணிகளும் 08/2023 ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.