சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 2452 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளுக்கான பெரு ஒதுக்கீட்டுடன் கூடிய காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 2452 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளுக்கான பெரு ஒதுக்கீட்டுடன் கூடிய காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண். 46/ நாள் 07.04.2020 ல் மற்றும் ரூ. 1752.73 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் உதவி (NABARD) மற்றும் மாநில அரசின் குறைந்த பட்ச தேவை திட்டம்(MNP) நிதி ஆகியவற்றின் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2036) மக்கள் தொகையின் படி, 13.56 இலட்சம் மக்களுக்கு 69.52 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2051) மக்கள் தொகையின் படி 16.11 இலட்சம் மக்களுக்கு 86.42 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நபர் ஒருவருக்கு நாளொன்றிற்கு நகரப் பகுதி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு முறையே 135 லி. 90 லி. மற்றும் 55 லி. குடிநீர் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நீராதாரமாக காவிரி ஆற்றில் கரூர் மாவட்டம், குளித்தலை தாலூகாவில் குளித்தலைக்கும் பேட்டவாய்த்தலைக்கும் இடைப்பட்ட பகுதியில் 5 நீர் சேகரிக்கும் கிணறுகள்(Collector well) முறையே தண்ணீர்ப்பள்ளி, மருதூர்-I, மருதூர்- II , பேட்டவாய்த்தலை மற்றும் குமாரப்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு அதன் மூலம் இயல்பு நீர் எடுக்கப்பட்டு மருதூரில் அமைக்கப்படவுள்ள 43.85 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட உள்ளது. இங்கிருந்து பாதிரிப்பட்டியில் அமைக்கப்பட உள்ள 43.85 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு 35.13 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும்.இந்த நீருந்து நிலையத்திலிருந்து 35.70 கி.மீ நீளமுள்ள குழாய்கள் மூலம் திருநெல்லிப்பட்டி முகடு புள்ளி வரை நீரேற்றம் செய்யப்பட்டு, பின்னர் 46.32 கி.மீ நீளமுள்ள தன்னோட்ட மூலம் தென்னம்மாள்பட்டியில் அமைக்கப்பட உள்ள 146.00 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு செல்லப்படும். தென்னம்மாள்பட்டி நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து, 4282.82 கிமீ நீளமுள்ள கிளை தன்னோட்டம் மற்றும் நீருந்து குழாய்கள் மூலம் 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட உள்ள தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்பட்டுள்ள மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. பின்னர் ஏற்கனவே உள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் 269.60 கீ.மி நீளமுள்ள புதிதாக பதிக்கப்படவுள்ள பகிர்மான குழாய்கள் வழியாக பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் பணிகள் நான்கு சிப்பமாக பிரிக்கப்பட்டு பணி உத்தரவு 01.02.2021 ல் வழங்கப்பட்டது.. இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் 08/2023ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.