திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 667 ஊரகக் குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 667 ஊரகக் குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண். 42/ நாள் 04.03.2022 ல் ரூ. 1127,20 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2037) மக்கள் தொகையின் படி, 4.68 இலட்சம் மக்களுக்கு 29.36 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2052) மக்கள் தொகையின் படி 5.23 இலட்சம் மக்களுக்கு 32.35 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நபர் ஒருவருக்கு நாளொன்றிற்கு ஊரகப் பகுதிகளுக்கு 55 லி. குடிநீர் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நீராதாரமாக கொள்ளிடம் ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலூகாவில் 3 நீர் சேகரிக்கும் கிணறுகள்(Collector well) முறையே வடுகக்குடி-I, ஆச்சனுர்- I , மற்றும் ஆச்சனுர்- II ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு அதன் மூலம் இயல்பு நீர் எடுக்கப்பட்டு வடுகக்குடியில் அமைக்கப்படவுள்ள 18.10 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட உள்ளது. இங்கிருந்து நல்லுரில் அமைக்கப்பட உள்ள 18,10 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு 40.775 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும். இந்த நீருந்து நிலையத்திலிருந்து முடிகொண்டானில் அமைக்கப்பட உள்ள 6,10 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அம்மையப்பன், இளவனுர் மற்றும் ஓகைப்பேரையூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து 473,348 கீ.மீ. நீளத்திற்கு பிரதான நீர் உந்து குழாய் மற்றும் கிளை நீர் உந்து குழாய்கள் மூலம் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட உள்ள தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்பட்டுள்ள 1027 மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள- 209 மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. பின்னர் ஏற்கனவே உள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் புதிதாக பதிக்கப்படவுள்ள பகிர்மான குழாய்கள் 875.76 கீ.மி வழியாக பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 44928- வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 06.05.2023- ல் வழங்கப்பட்டது.. இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் 11/2024- ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.