திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான தாமிரபரணி ஆற்று நீரை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர்த்திட்டம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு நகராட்சி, மற்றும் நாங்குநேரி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, பணகுடி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் அரசு ஆணை நிலை எண். 80/ நாள் 22.06.2023 ல் ரூ. 423.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, இத்திட்டம் அம்ருத் 2.0 மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2039) மக்கள் தொகையின் படி, 2.14 இலட்சம் மக்களுக்கு 24.50 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2054) மக்கள் தொகையின் படி 2.50 இலட்சம் மக்களுக்கு 30.16 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் நபர் ஒருவருக்கு நாளொன்றிற்கு 135 லிட்டர். குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தாமிரபரணி ஆற்றில், சேரன்மகாதேவி அருகில் அமைக்கப்படவுள்ள 8 மீ விட்டமுள்ள நீர் எடுப்பு கிணறு (Intake well) மூலம் இயல்பு நீர் எடுக்கப்பட்டு 9.06 கி.மீ. நீளமுள்ள இயல்பு நீரேற்று குழாய்கள் மூலம் கங்கனாங்குளம் அருகிலுள்ள, திருவிருந்தாள்புளி கிராமத்தில் அமையவுள்ள 25.72 MLD சுத்திகரிப்பு திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட உள்ள 10.65 LL கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் சேகரிக்கப்படவுள்ளது. பின்னர் தரைமட்ட தொட்டியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் 17.58 கிமீ தூரத்தில் உள்ள மேல் உச்சிப் பகுதிக்கு உந்தப்பட்டு, பின்னர் மலையடிபுதூர், திருங்குறுங்குடி மற்றும் ஏர்வாடி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள இடைநிலை தரைமட்ட குடிநீர் சேகரிப்பு தொட்டிகளில் தன்னோட்டத்தின் மூலம் சேகரிக்கப்படவுள்ளது.
களக்காடு நகராட்சிக்கான குடிநீர் நீருந்து குழாயில் 12.12 கி.மீ.-ல் இணைப்பு எடுக்கப்பட்டு 2.30 LL கொள்ளளவு கொண்ட முதன்மை நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் நாங்குநேரி (0.25 LL), மூலக்கரைப்பட்டி( 0.80 LL), திசையன்விளை (1.75 LL) தொட்டிகளுக்கு நீருந்து குழாயில் 14.460 கி.மீ-ல் இணைப்பு எடுக்கப்பட்டு நாங்குநேரியில் அமையவுள்ள 2.90 LL கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் சேகரிக்கப்படவுள்ளது. பின்னர் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, திசையன்விளை நீர் தேக்க தொட்டிகளுக்கு தன்னோட்டத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நீருந்து மற்றும் தன்னோட்ட குழாய்களின் மொத்த நீளம் 116.13 கி.மீ ஆகும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளிலிருந்து 37 ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் 24 புதியதாக அமைக்கப்படவுள்ள மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டிகளுக்கு 105.20 கி.மீ நீளமுள்ள நீரூட்டும் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளிலிருந்து 522.00 கி.மீ நீளமுள்ள ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக பதிக்கப்பட உள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 49,417 வீட்டு இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்திற்கான பணிஆணை 27.02.2024 வழங்கப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் 2025-ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.