விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களைச் சார்ந்த 1286 கிராமக்குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சார்ந்த 45 கிராம குடியிருப்புகளுக்கான தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்.
விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 1331 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை நிலை எண்.157/நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை/ நாள் 28.10.2022 ல் ரூ. 1387.73 கோடிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் ஜல் ஜீவன் மிஷன் நிதி மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
இத்திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியத்தைச் சார்ந்த 1286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியத்தைச் சார்ந்த 45 குடியிருப்புகள் ஆக மொத்தம் 1331 கிராம குடியிருப்புகள் பயன்பெற உள்ளன.
இத்திட்டத்திற்கான இடைக்கால மக்கள் தொகை (2039) 8.39 இலட்சம் மக்களுக்கு 36.56 மில்லியன் லிட்டர், உச்ச காலம் (2054) மக்கள் தொகை 9.51 இலட்சம் மக்களுக்கு 43.71 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராம குடியிருப்புகளில் நபர் ஒருவருக்கு 55 லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகில் தாமிரபரணி ஆற்றில் ஒரு நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்படவுள்ளது. நீர் சேகரிப்பு கிணற்றின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக குருவிக்குளம் நகர் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 17.90 இலட்சம் கொள்ளளவு உள்ள தரைமட்ட நீர் உந்து நிலையத்தில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது, அங்கிருந்து 2 பொது தரைமட்ட நீர் உந்து நிலையம் மற்றும் 163 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 2443.92 கி.மீ நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது .பின்னர் 84.106 கி.மீ கிளை நீர் உந்து குழாய்கள் மூலம் பயன்பாட்டிலுள்ள 892 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதியதாக கட்டப்படவுள்ள 178 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படவுள்ளது. பின்னர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 218808 வீட்டு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டம் மூன்று சிப்பங்களாக பிரிக்கப்பட்டு சிப்பம் I & II ஒப்பந்த நிலையில் உள்ளது. சிப்பம் II – பணி உத்தரவு 19.06.2023 அன்று வழங்கப்பட்டு, 12/2024 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.